ஜெயங்கொண்டம், ஜூன் 27: ஜெயங்கொண்டம் அருகே ஹெச்.எம்முக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடத்தை சேர்ந்தவர் தமிழ்முருகன்(48). விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
காட்டாத்தூரை சேர்ந்த விசிக பிரமுகர்கள் பாக்கியராஜ்(35), வேல்முருகன்(49) ஆகியோர் கடந்த ஒரு வாரத்துக்கு முன் அரசு பள்ளிக்கு சென்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் தமிழ் முருகனிடம், வேல்முருகனின் மகனுக்கு பிளஸ் 1 வகுப்பில் குறிப்பிட்ட பாடப்பிரிவு கேட்டனர்.
அதற்கு நீங்கள் கேட்கும் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. வேறு ஏதாவது பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என்று தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து தலைமை ஆசிரியர் தமிழ் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசில் தமிழ்முருகன் கடந்த 20ம் தேதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த பாக்கியராஜ், வேல்முருகனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.