பாலக்காடு, ஜூன் 6: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே கய்பமங்கலம் பகுதியில் ஹாசிஸ் ஆயில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கலால்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவரிடமிருந்து 34 கிராம் ஹாசிஸ் ஆயில் டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உயர் ரக போதைப்பொருள் என்பதால் இதன் மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். கொடுங்கல்லூர் அருகே கும்பளத்துப்பரம்பு என்ற பகுதியில் கொடுங்கல்லூர் ரேஞ்சு இன்ஸ்பெக்டர் பிரதீப் தலைமையில் காவலர்கள் வாகன பரிசோதனையில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டினர்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபர் மன்னார்க்காட்டை சேர்ந்த முகமது (27) என்பவரை தடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் அவரது உடமைகளை பரிசோதனை செய்தனர். இதில் 34 கிராம் ஹாசிஸ் ஆயில் உயர் ரக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது மீது வழக்குப்பதிந்து கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.