காரைக்குடி, மே 19: காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி அழகப்பா மாடல் ஹாக்கி கிளப் மற்றும் ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் கோடைகால இலவச ஹாக்கி பயிற்சி முகாம் நடந்தது. கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பயிற்சி நடந்த நிலையில் நிறைவு விழாவில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார்.
முகாம் ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் முத்துக்கண்ணன் செய்திருந்தார். குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன் துரைராஜ் மாணவர்களுக்கு சான்றுகளை வழங்கினார். முகாமில் சிறந்த மாணவராக நிதீஷ்குமார் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. கோவை இளங்செழியன், முருகப்பன் ஆகியோர் மாணவர்களுக்கு தேவையான ஹாக்கி உபகரணங்களை வழங்கினர். முன்னாள் மாணவர் விஜயராஜ் நன்றி கூறினார்.