நன்றி குங்குமம் டாக்டர்எலும்பே நலம்தானா?!முதுகில் உள்ள எலும்புகளுக்கு இடையில் குஷன் போன்ற அமைப்பு இருக்கும். அவற்றை டிஸ்க்(Disk) என்கிறோம். அவைதான் எலும்புகளை அதிர்வுகளிலிருந்து காப்பவை. அதையும் மீறிய அதிர்ச்சியில் டிஸ்க் பிதுங்கவோ, நசுங்கவோ கூடும். அதன் தொடர்ச்சியாக கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் கடுமையான வலி இந்த நிலையையே ஸ்லிப்டு டிஸ்க்(Slipped Disk) என்கிறோம்.ஸ்லிப்டு டிஸ்க்கின் அறிகுறிகள்கழுத்தில் தொடங்கி, அடி முதுகு வரை எந்த இடத்திலும் டிஸ்க் பிதுங்கல் அல்லது நழுவல் நடக்கலாம். அதனால் இந்த இடங்களில் எதில் வேண்டுமானாலும் வலி வரலாம். ஆனாலும் இதில் அடி முதுகு பகுதிதான் அதிகம் பாதிக்கப்படுகிறது. முதுகெலும்பு பகுதியானது மிக நுண்ணிய நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களைக் கொண்டது. இத்துடன் டிஸ்க் பிதுங்குவதும் சேரும்போது, முதுகெலும்பு பகுதிக்கு அழுத்தம் அதிகரிக்கும். அதனால் இன்னும் வலி தீவிரமாகும்.கீழ்க்கண்ட அறிகுறிகளையும் உணரலாம். ஒரு பக்கத்தில் வலி அல்லது மரத்துப் போன உணர்வு, வலியானது கை மற்றும் கால்களுக்கு பரவுதல், குறிப்பிட்ட சில அசைவுகளின்போது வலி அதிகரிப்பது அல்லது இரவில் அதிகரிப்பது, நின்ற பிறகோ அல்லது உட்கார்ந்த பிறகோ வலி அதிகமாவது, சிறிது தூரம் நடந்தாலே வலி அதிகமாவது, காரணமே கண்டுபிடிக்க முடியாத பலவீனம், வலியுடன் எரிச்சலும் சேர்ந்துகொள்வது.காரணங்கள்குஷன் போன்ற டிஸ்க் பகுதியின் வெளிப்புறம் தேய்ந்தோ, கிழிந்தோ போவதால் உட்புற பகுதியானது பிதுங்கி வெளியே வரும். இது வயதாகும்போது வருகிற பிரச்னை. தவிர முதுமையின் காரணமாக முதுகெலும்பு பகுதிகளில் திரவம் குறைந்து, நெகிழ்வு தன்மையை பாதிப்பதும் ஒரு காரணம்.சில வகையான அசைவுகள் மற்றும் இயக்கங்களும் இதற்கு காரணமாகலாம். உதாரணத்துக்கு உடலை அசாதாரண நிலையில் திருப்புவது, மிக கனமான பொருட்களை தூக்குவது போன்றவை அடி முதுகில்; கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி, ஸ்லிப்டு டிஸ்க் பிரச்னைக்கு காரணமாகலாம். அதிக கனமான பொருட்களை தூக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு இந்த அபாயம் மிக அதிகம்.வெயிட் லிஃப்டிங் பயிற்சி செய்கிறவர்களும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முறையான பயிற்சியாளரின் ஆலோசனையின்றி தானாக செய்கிறவர்களுக்கு இந்த பாதிப்பு வரும். புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு ஸ்லிப்டு டிஸ்க் பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் மற்றவர்களைவிட அதிகம்.
எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?முதல் கட்டமாக உங்கள் மருத்துவர் வலிக்கும் பகுதியை முழுமையாக பரிசோதிப்பார்.; குறிப்பிட்ட இடத்தை தொடும்போது உங்களுக்கு வலி அதிகரிக்கிறதா என்று பார்ப்பார். ஆரம்ப கட்ட பரிசோதனைக்கு பிறகு தேவைப்பட்டால் எக்ஸ்ரே, ஸ்கேன், எம்.ஆர்.ஐ மற்றும் டிஸ்கோ கிராம் போன்றவை செய்ய வேண்டுமென சொல்வார்.ஸ்லிப்டு டிஸ்க் என்ன செய்யும்?ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்படும். மிக தீவிரமான நிலையில் இது ஏற்படுத்தும் பாதிப்பால் குடல் மற்றும் சிறுநீரகங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் நிலையும் ஏற்படலாம்.நீண்ட காலமாக குணப்படுத்தாத நிலையில் சாடில் அனஸ்தீசியா(Saddle anesthesia) என்கிற பிரச்னை ஏற்படும். இந்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தொடையின் உள் பக்கம், கால்களின் பின் பக்கம் மற்றும் மலக்குடலை சுற்றியுள்ள பகுதிகளில் உணர்வுகளே இல்லாத நிலை ஏற்படும்.என்ன சிகிச்சைகள் கொடுப்பார்கள்?பிரச்னையின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சை வேறுபடும்.பொதுவாக ஓய்வு, உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளின் உதவியோடு ஸ்லிப்டு டிஸ்க் பிரச்சனையை குணப்படுத்தலாம். இதற்கு 1 முதல் 3 மாதம் ஆகலாம். சிலருக்கு வெறும் உடற்பயிற்சிகளே போதுமானதாக இருக்கும்.; இன்னும் சிலருக்கு வலி நிவாரண மாத்திரைகளே போதுமானதாக இருக்கும். பிசியோதெரபி சிகிச்சையின் மூலமும் இந்த பாதிப்புக்கு நிவாரணம் பெறலாம்.இப்படி எந்த சிகிச்சையிலும் குணமடையாதவர்களுக்கும், நிற்பதும், நடப்பதுமே முடியாது என்கிற நிலையில் இருப்பவர்களுக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஸ்லிப்டு டிஸ்க் பிரச்னை வந்தவர்கள் அதன் பிறகு ஆக்டிவாக இருக்க வேண்டியது அவசியம். மிதமான, உடலை வருத்தாத உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனையுடன் செய்து வர வேண்டும்.தவிர்க்கலாம்ஸ்லிப்டு டிஸ்க் பிரச்னை பெரும்பாலும் முதுமையில் ஏற்படுவது என்பதால் இள வயதிலிருந்தே ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்து வரலாம். உடற்பயிற்சி செய்வது முதுகு பகுதிக்கும் நல்லது.எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளவும். புகையை நிறுத்தவும். அதிலுள்ள நிக்கோடின் டிஸ்க் ஆரோக்கியத்துக்கு எதிரி.நிற்கும்போதும், நடக்கும்போதும், உட்காரும்போதும் முதுகை வளைக்காமல், பின்பக்கம் அதிகம் சாயாமல் நேராக இருப்பது சிறந்தது. பொருட்களை தூக்கும்போது கவனம் வேண்டும். அதிக கனமுள்ள பொருட்களை ரிஸ்க் எடுத்து தூக்க வேண்டாம்.(விசாரிப்போம்)எழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி