ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.9: ஸ்ரீவில்லிபுத்தூரில் மழைக்கால முன்னேற்பாட்டு நடவடிக்கையாக நீர்வழிப்பாதைகளில் உள்ள செடி, கொடி, அடைப்புகளை அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளில் உள்ள பாலங்கள் மற்றும் நீர் வழிப்பாதைகளில் இருக்கும் மண் அடைப்புகள், செடிகள், முட்புதர்கள் ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆலோசனையின்படி, ஜேசிபி மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதேபோல, திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பாலம், அவைகளில் உள்ள தூண்கள் மற்றும் மேல்தளம் ஆகியவற்றில் வண்ணம் அடித்து பராமரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழை காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் நீர்வழிப்பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.