Sunday, May 28, 2023
Home » ஸ்ரீராமன் பாதுகா மகிமை

ஸ்ரீராமன் பாதுகா மகிமை

by
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் பெருமையுள்ள இறைவன் திருவடிகளை வேதங்களாகிய பெண்கள் எப்பொழுதும் வணங்குகின்றனர் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. பெரிது பெரிது திருவடி பெரிது. அதனினும் பெரிது ‘திருவடித்தலம்’ என்ற பாதுகை. பாதுகை என்றவுடனேயே நாம் பரதனை நினைக்க வேண்டும். கானகம் ஏகிய இராமரை அயோத்திக்குத் திரும்பச் செய்ய இயலாமல், ‘‘வேறு செய்வது ஒன்று இன்மையின், செம்மையின் திருவடித்தலத்தைக் கேட்டுப் பெறுகின்றான் பரதன். இதையே கம்பர்‘‘அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்முடித்தலம் இவை என முறையின் சூடினான்’’என்கிறார்.அடியும் முடியும் சேர்வது தான் பகவானுடைய ஐக்கிய பாவம். கீழான இடதுகையையும் மேலான வலது கையையும் சேர்த்துத்தான் கடவுளையும் பெரியோரையும் கைகூப்பி வணங்குகின்றோம். பாதுகையின் பெருமையை துளசிதாசர் சொல்வதையே கேளுங்கள்.‘‘சரண் பீட் கருணா நிதான் கேஜண ஜுக் ஜாமிக் ப்ரஜா ப்ராண் கேஸம்புட பரத ஸநேஹ ரதன் கேஆகர் ஜுக் ஜனு ஜீவ் ஜதன் கேகுல கபாட் கர் குஸல கர்ம கேவிமல நயன ஸேவர ஸீதர்ம் கே ’’‘‘கருணா மூர்த்தியான சக்கரவர்த்தித் திருமகனின் இருபாதுகைகளும் மக்களின் உயிரைக்காக்க வந்த இரு காவலர் போன்றவை. பரதனுடைய பிரேம பக்தியாகிற ரத்தினத்திற் காகப் படைக்கப்பட்ட பெட்டகங்கள் போன்றவை. மானிட உயிர்களைக் கரையேற்ற வந்த ‘ராம’ என்ற தாரக மந்திரத்தின் இரண்டெழுத்துக்கள் போன்றவை. நல்லெண்ணங்கள் யாவற்றுக்கும் செயல் கொடுக்க வந்த இருகைகள் போன்றவை. ரகு குலத்தையே அலங்கரிக்க வந்த இருவாசல்கள் போன்றவை. அறநெறி காட்டி இருள் நீக்க வந்த இரு கண்கள் போன்றவை’’ என்றெல்லாம் வருணிக்கிறார் துளசிதாசர். ராமபிரானின் திருவடியைவிட திருப்பாதுகை இன்னும் உயர்ந்தது என்பதை ரசித்து அனுபவிக்க ‘கவிதார்க்கிக் சிம்மம்’ என்று யாவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட வேதாந்த தேசிகர் சொல்லக் கேட்க வேண்டும். ஒரே இரவில், ஒன்றல்ல, இரண்டல்ல; ஓராயிரம் ஸ்லோகங்கள் கொண்ட ‘‘பாதுகா ஸஹஸ்ரம்’’ என்ற நூலை இயற்றி. அதன் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் பாதுகையின் மேன்மையைப் பற்றி வீரகர்ஜனையே செய்திருக்கிறார் வேதாந்த தேசிகர். பெருமாள் பாதுகையை சடாரி என்பார்கள். சடாரியை நாம் தலைமேல் வைத்து வணங்குகிறோம். பரதன் ராமரின் பாதுகையை வாங்கிக் கொள்ளுமுன், அவரை அதன் மேல் ஏறி, இறங்கச் சொல்கிறான். இந்தக் கதை வால்மீகி ராமாயணத்தில் உள்ளது. கம்பரோ, துளசி தாசரோ இதைப் பற்றிச் சொல்லவில்லை. ‘‘பெருந்தகையே, தாங்கள் இந்தப் பாதுகைகளில் ஏறி இறங்கும்படி மிகவும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இவையே சகல லோக க்ஷேமத்தைத் தாங்கக் கூடியவை’’ என்று பரதன் சொல்ல, ஸ்ரீஇராம பிரானும் அப்படியே அந்தப் பாதுகையில் ஏறி இறங்கிப் பரதனிடம் கொடுத்தார்.இந்தச் சம்பவத்தை மனக்கண் முன் நிறுத்திப் பார்க்கும்போது நமக்கு என்ன தோன்றுகிறது? பாதுகைகளுக்கு அருட்சக்தியை அளிப்பதற்காகவே ராமன் அவைகள் மேல் ஏறி இறங்கினார் என்றுதானே பொருள் கொள்வோம். அப்படித்தான் வேதாந்த தேசிகரும் தன் பாதுகா ஸஹஸ்ரத்தின் 113-வது ஸ்லோகத்தில் சொல்கிறார். ஆனால், பின்னால் வரும் 116-வது ஸ்லோகத்தில் ‘பாதுகைக்கு’ தனக்குத் தானே ஒரு சக்தி இருக்கிறதென்றும், அதிலிருந்து அந்தச் சக்தியை தன் திருவடிகளுக்கு வாங்கிக் கொள்வதற்காகவே பாதுகைகளின் மேல் ஏறி இறங்கினார் என்றும் சொல்கிறார். ஏனென்றால் தேசிகரின் வாக்குப்படி.‘‘ஸகதமிதரதா த்வாம் ந்யஸ்ய ராமோ விஜஹ்ரேத்ருஷ துபசித பூமௌ தண்ட காரண்ய பாகே’’என்கிறார். ‘‘அப்படிச் செய்யாவிட்டால் அந்த ராமன் பாதுகையை பரதனிடத்தில் வைத்துவிட்டு கல்லும் முள்ளும் நிரம்பியிருக்கிற தண்டகாரண்ய பூமிகளிலே எப்படி சஞ்சரித்திருக்க முடியும்?’’ என்கிறார் தேசிகர். பாதுகை என்பதே ஆச்சாரியருக்குச் சமானம். பாதுகா ஸஹஸ்ரத்தில் ஒவ்வொரு ஸ்லோகத்தின் உட்கருத்திலும் ஆச்சாரியரின் கருணை ஆண்டவனின் கருணையைக் காட்டிலும் சீக்கிரம் பயன் தரக் கூடியது. ஆச்சாரியாரை அண்டினால் ஆண்டவனை வெகு சுலபமாக அடைந்து விடலாம் என்ற தத்துவம் பொதிந்திருக்கிறது. பாதுகையின் பெருமை பற்றி உபநிஷத்துகள் பறை சாற்றுகின்றன. பாதுகையின் பெருமை மனதினால் அளவிட முடியாதது. அதுவே மகா விஷ்ணுவின் பரமபதமாகும். இதையே,‘‘தத் விஷ்ணோ: பரமம் பதம்’’ என்ற ஸ்லோகத்தின் வாயிலாகச் சொல்லுகிறார் வேதாந்த தேசிகர்.அயோத்தி மக்கள் பெரும் ஆவலுடன் காடு சென்ற இராமன் இளவல் பரதனுடன் வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் பரதன், தன் தலைமேல் அண்ணன் இராம பிரான் அணிந்திருந்த பாதுகையான மரவடியை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான் என்பதை அறிந்த மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.பரதன் மக்களைப் பார்த்து, ‘‘நாட்டைத்தாங்குபவன் இராமன். அவனை சதா காலமும் தாங்கிய இந்தப் பாதுகைக்கு நாட்டை ஆளும் திறமை இல்லாமல் போய்விடுமா?’’ என்று கூறி அவர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தினான்.பரதன், நந்திக்கிராமத்தில் பாதுகையை உயர்ந்த பீடத்தில் வைத்து பட்டாபிஷேகம் செய்வித்து அயோத்தி அரசை ஏற்றுக்கொள்ளச் செய்து பதினான்கு ஆண்டுகள் கழியும் வரை, இராமனைப் போன்றே மரவுரி தரித்து, நல் ஆட்சிபுரிந்தான். ராமராஜ்ஜியத்தைக் காட்டிலும், பாதுகாராஜ்ஜியம் நன்றாக ஆளப்பட்டது. மக்கள் குறை ஏதுமின்றி மன நிம்மதியோடு சந்தோஷமாக வாழ்ந்தனர். அறநெறி தவறாமல் பாதுகை நல்லாட்சி புரிந்தது. மாமுனிவர்கள் மற்றும் சான்றோர்களின் ஆலோசனைகேட்டு, அதன்படி எந்தச் செயலையும் செய்தான்பரதன். பொதுமக்களின் அபிப்பிராயம் கேட்டு அவர்களின் ஆசைகளை நிறைவேற்றினான். அங்கே பசியும், பஞ்சமும், பிணியும் மக்களை வாட்டியது கிடையாது. திருட்டு, கொலை, பயம் போன்ற அநீதிகள் அந்த ஆட்சியில் கிடையாது. மாதம் மும்மாரி பொழிந்து நாட்டை வளப்படுத்தியது. அனைத்து உயிர்களும் செல்வச் செழிப்போடு வாழ்ந்தன. ஆக ராமராஜ்ஜியத்தைக்காட்டிலும் பாதுகா ராஜ்ஜியம் நன்றாக ஆளப்பட்டது. ராமன் திருவடித்தாமரையை எக்காலமும் தொட்டு இன்புறும் பெருமை பாதுகைக்கே உரியது. இதை நன்றாக அறிந்தவன் பரதன். அண்ணல் பாதுகையன்றி வேறு எந்தவொரு தெய்வத்தையும் அவன் தொழவில்லை. அவன் அருளால் அவன் ஆட்சி நன்றாக நடந்தது.தொகுப்பு: டி.எம். ரத்தினவேல்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi