திருச்சி, ஆக.31: ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலக வளாகத்தில் ஏஐடியூசி சங்கத்தைச் சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள் என்எஸ்பி ரோட்டில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். திருச்சி மாநகரின் முக்கிய பகுதியான என்.எஸ்.பி ரோட்டில் உள்ள பெரிய நிறுவனங்கள் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக வைத்துள்ள பேரிகார்டுகளை அகற்றக்கோரி ஏ.ஐ.டி.யு.சி தரைக்கடை, சிறு கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு மனு அளித்தனர்.
அதிகாரிகள் உறுதியளித்தும் பேரிகார்டுகள் அகற்றப்படாததை கண்டித்தும், உடனடியாக பேரிகார்டுகளை அகற்ற வலியுறுத்தியும் ஏஐடியூசி தரைக்கடை சிறுகடை வியாபாரி சங்கத்தினர் நேற்று மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரி தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் வரும் 2ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.