புதுச்சேரி, ஜூன் 6: புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் தொய்வை கண்டித்து தலைமை செயலகத்தை எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் முதல்வர் பங்கேற்ற அரசு விழாவில் தலைமை செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை தலைமை செயலர் ஆய்வு செய்வதில்லை. இத்திட்டங்கள் காலதாமதமாக நடப்பதாகவும் உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ நேரு, சில தினங்களுக்கு முன்பு குற்றம்சாட்டி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்திருந்தார்.இந்த நிலையில் நேற்று புதுச்சேரி தலைமை செயலகம் முன்பு நேரு எம்எல்ஏ தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த கிழக்கு எஸ்பி சுவாதிசிங், பெரியகடை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட எம்எல்ஏ, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதை ஏற்க மறுத்த நிலையில் தலைமை செயலரின் தனிச் செயலர் நேரில் வந்து போராட்டக் குழுவிடம் பேசினார். ஆனால் தலைமை செயலர் நேரில் வந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் ஆய்வு தொடர்பாக உறுதிமொழி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். பேச்சுவார்த்தை நடத்திய தனி செயலரிடம் சரமாரி கேள்வி எழுப்பினர். காவல்துறை உயர் அதிகாரிகள், உறுதிமொழி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.