அபராதம்ராசிபுரம், ஆக.29: ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை நிறுத்தத்தில், 2வது நாளாக நிறுத்தாத தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கலெக்டர் உத்தரவை மீறிய தனியார் பஸ்சுக்கு ₹12 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சேலம்-நாமக்கல் வழித்தடத்தில், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில், தனியார் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என கலெக்டர் உமா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். ஆனால், சில தனியார் பஸ்கள் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் நிற்காமல் சென்று வந்தது. நேற்று முன்தினம், மசக்காளிப்பட்டியை சேர்ந்த பரிமளா என்ற பெண், சேலத்தில் இருந்து நாமக்கல் சென்ற பஸ்சில் ஏறி, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இறங்க பயணச் சீட்டு கேட்டுள்ளார். அப்போது, கண்டக்டர் பஸ் அங்கு நிற்காது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கிராம மக்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்ததால், பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெண்ணந்தூர் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று அதே தனியார் பஸ், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் நிறுத்த மறுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நேற்றும் பஸ்சை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வெண்ணந்தூர் போலீசார், கலெக்டர் உத்தரவை மீறி இயங்கிய தனியார் பஸ்சுக்கு ₹12 ஆயிரம் அபராதம் விதித்து, இனி வரும் நாட்களில் கட்டாயம் பஸ்சை நிறுத்த வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.