ஈரோடு, செப். 6: வஉசி பிறந்தநாளை முன்னிட்டு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் வஉசி பிறந்தநாள் விழா, அமைச்சரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ள பெரியார் நகரில் நேற்று காலை நடைபெற்றது.
இதில், வீட்டு வசதித்துறை அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் சு.முத்துசாமி, வஉசியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, ஈரோடு எம்பி பிரகாஷ், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் செங்கோட்டையன், அவல்பூந்துறை குணசேகரன், மாநில மாணவரணி துணைச்செயலாளர் வீரமணி, மாவட்ட துணைச்செயலாளர் சின்னையன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தலைமைக் கழக பேச்சாளர் இளைய கோபால், பகுதி கழக செயலாளர்கள் வி.சி.நடராஜன், சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.