மதுரை, ஜன. 8: வைகை ஆற்றில் இருந்து, லாரிகளில் தண்ணீர் திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம் வைகை அணையில் துவங்கி ராமநாதபுரம் ஆஸ்.எஸ்.மங்களம் கண்மாயில் கலக்கும், வைகை ஆறு 192 கி.மீ தூரம் பயணிக்கிறது. இதில், மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 13.50 கி.மீ மற்றும் புறநகர் பகுதியில் 30.5 கி.மீ தூரம் என, மொத்தம் 44 கி.மீ இந்த ஆறு கடந்து செல்கிறது.
இதில், மாநகரின் குடிநீர் தேவை, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் பணிகளுக்காக, கடந்த, 2020ம் ஆண்டு கோரிப்பாளையம் ஏ.வி மேம்பாலம், ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.புறநகரில் வேளாண் பணிகளுக்கு எனக்கூறி வைகை கிளை கால்வாய்களில் இருந்து, மோட்டார் வைத்து தண்ணீர் இறைப்பது, கால்வாய்களை அடுத்து அதிக திறன் கொண்ட மோட்டார்கள் வாயிலாக குழாய்கள் பொருத்தி, தண்ணீர் உறிஞ்சுவது என, பல வழிகளில் தண்ணீர் திருட்டு நடந்து வருகிறது.
இதை தடுக்க போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் மாநகரின் முக்கிய பகுதியான, ஏ.வி மேம்பாலத்தின் கீழ் பகுதியிலேயே தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான, லாரிகளில் மோட்டார் உதவியுடன் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதுபோல் வைகையில் இருந்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.