மதுரை, ஆக. 12: மதுரை வைகையாற்றில் நாள்தோறும் குப்பைகள் அதிகளவிற்கு கொட்டப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. மேலும் அவ்வப்போது கழிவுநீரும் ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் மதுரை, அண்ணாநகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் மருத்துவ கழிவுகளுடன் கூடிய குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது.
இதனால் ஆற்றுப்பகுதி முழுவதும் சீர்கேடு அடைவதுடன், விவசாய நிலங்களுக்குள் நீரோடு சேர்ந்து கலக்கிறது. இதுகுறித்து மாவட்ட மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘வைகை ஆற்றிற்குள் குப்பைகள், கழிவுகள் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ கழிவுகள் கொட்டுவது பேராபத்தானது. இதனை செய்வோர் தண்டிக்கப்படுவர்’’ என்றனர்.