கிருஷ்ணகிரி, ஜூன் 10: கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு, முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில், நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வினை தீர்த்த விநாயகர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவியில் உள்ள பாலமுருகன் கோயில், கிருஷ்ணகிரி அருகே பெரியமுத்தூர் கருமலையில் கந்தவேலர் கோயில், பர்கூர் அருகே சிகரலப்பள்ளியில் உள்ள திருச்செங்குன்றம் கல்யாண முருகன் கோயில், கெலமங்கலம் அருகே ஜக்கேரி ஊராட்சி சின்னட்டியில் உள்ள சின்ன பழனி பாலமுருகர் கோயில் என மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கருட வாகனத்தில் நகர் வலம் வந்து சுவாமி அருள்பாலித்தார். காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பாலக்கோடு சாலையில் கருக்கண்சாவடி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. வள்ளி-தெய்வானையுடன் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.