Thursday, June 1, 2023
Home » வைகாசி மாதச் சிறப்புகள் விசாக நட்சத்திரத்தின் தெய்வீகப் பெருமைகள்!

வைகாசி மாதச் சிறப்புகள் விசாக நட்சத்திரத்தின் தெய்வீகப் பெருமைகள்!

by kannappan
Published: Last Updated on

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்நம் முன்னோர்கள், ஒரு வருடத்தை பருவ காலங்களாக, ஆறு வகைகளாகப் பிரித்தனர். அதாவது, கார்காலம்   ஆவணி மற்றும் புரட்டாசி எனவும், குளிர்காலம்   ஐப்பசி – கார்த்திகை, முன்பனிக் காலம்   மார்கழி – தை, பின் பனிக்காலம்   மாசி – பங்குனி, இளவேனிற்காலம்   சித்திரை – வைகாசி, முதுவேனிற்காலம்   ஆனி-ஆடி மாதங்களாகும். பண்டைய காலத்தில் நட்சத்திரங்களைக் கணக்கிடும்போது, கார்த்திகை நட்சத்திரத்தை முதலாவதாகக் கொண்டுதான் கணக்கிடுவார்கள். மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுள் நடுநாயக ரத்தினமாக வீற்றிருப்பது,  (அதாவது 14 வது நட்சத்திரமாக) விசாக நட்சத்திரம்! சித்திரா பௌர்ணமிக்கு அடுத்துவரும் முழுநிலவுப் பௌர்ணமியானது, விசாக நட்சத்திரத்தில் உதயமாவதால்தான் அம்மாதத்திற்கு வைகாசி என்ற பெயரே ஏற்பட்டது.விசாகத்தின் உயர்வு!சூரிய பகவான், மேஷ ராசியிலிருந்து, ரிஷப ராசிக்கு பிரவேசிப்பதையே மாதவ மாதம் என்றும் ரிஷப மாதம் என்றும் அழைப்பர். குரு பகவானின் நட்சத்திரம் விசாகம்! விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயவான்கள்; நீதி பதிகளாக விளங்குபவர்களின் ஜாதகங்களில், விசாக நட்சத்திரத்தின்  சுபபலம் மிகுந்திருக்கும். வாழ்க்கையை, ஏனோ தானோவென வாழாமல், ரசனையுடன்கூடிய மனத்தை உடையவர்களாகவும், நல்ல அறிவாளிகளாகவும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் பக்தி, புத்திமான்களாகவும், ஞானமுடையவர்களாகவும், அந்த ஞானத்தால், பிறருக்கு உதவுவதில் முன்மாதிரியாகவும், புகழுடன் கூடியவர்களாகவும் தவறு செய்தவர்கள், தனக்கு வேண்டப்பட்டவர்களாகவே இருந்தாலும், பாரபட்சம் காட்டாதவர்களாகவும் இருப்பார்கள் என்பதைப் புராதன ஜோதிடக் கிரந்தங்கள் எடுத்துக்கூறுகின்றன. மேலும், சித்தார்த்தனாகத் தோன்றி, பின், அனைத்து சுகங்களையும் துறந்து, எதிலும் பற்றற்றவராக   ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதை உலகிற்கு உணர்த்தி, ஞானம் அடைந்து, புத்தராக பரிமளித்ததும், நம்மாழ்வாரின் அவதாரத் திருநட்சத்திரமும் இந்நன்னாளில்தான்! மேலும் எமதர்மராஜரின் அவதார தினமானதால், இந்நன்னாளில் ஸ்ரீவாஞ்சியத்தில் பிரத்யேகமாக அமைந்துள்ள திருக்கோயிலில், எமதர்மராஜரை தரிசிப்பதும் நோய்-நொடி எத்துன்பமுமின்றி பலகாலம் வாழ்ந்து, பிறருக்கும் நன்மைகளைச் செய்து முக்தியும் பெறலாம்.விசாகமும் முருகக் கடவுளும்!ஞானக் கடவுளாகிய ஸ்ரீமுருகனுக்கென்றே பிரத்யேகமான வகுக்கப்பட்ட விழாக்களாகிய ஐப்பசி சஷ்டி விரதமும் (5-6-2022) வைகாசி விசாகமுமே (12-6-2022) மிகமிக முக்கியமான திருவிழாக்களாகும். பரித்ராணாய ஸாதூனாம்…!அரக்கர்களின் அராஜகச் செயல்களால் அவதியுற்ற வானவர்களாகிய தேவர்கள், கைலாயத்தை அடைந்து, ஸ்ரீ சிவபெருமானைச் சரணடைந்தனர். தன் பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்கி,  பஞ்ச பூதங்களாகிய வாயு, அக்னி, வானம், காற்று, நீர், நிலத்தின் மூலம் கங்கைக் கரையில் கொண்டு வந்துவிட்டு வணங்கி நின்றனர். கங்காதேவியோ, அத்தீப் பொறிகளைச் சுமந்தவாறு, தெய்வீகப் பெருமை பெற்ற, மானஸ ஸரோவரின் கரையில் திகழும், மாந்தாதா சிகரத்தின் அடிவாரத்திலுள்ள, சரவணப் பொய்கையில்  தவழவிட்டு வணங்கி நின்றாள்! அந்த ஆறு தீப்பொறிகளும் வைகாசி விசாக புண்ணிய தினத்தில் ஆறுமுகனாகத் தோன்றினார்! ஸ்ரீ மகா விஷ்ணுவோ, இக்குழந்தைகளை வளர்த்துவருமாறு கார்த்திகைப் பெண்களுக்குக் கட்டளையிட்டார். ஆறு குழந்தைகளும் ஆறுமுகக் கடவுளாகக் காட்சியளித்தார்! ஆறுமுகங்கொண்ட ஸ்ரீ முருகப் பெருமான், தேவர்களைத் தொல்லைக்குள்ளாக்கிய அரக்கர்களை நிர்மூலமாக்கினார். இந்நன்னாளில் ஸ்ரீமுருகப் பெருமானை, பக்திச் சிரத்தையுடன் வழிபடும் பக்தர்களின், எதிரிகள் காணாமற்போவார்கள். அறுபடை வீடுகொண்ட பெருமானுக்கு, படைவீடுகளிலும் விசேஷமான பூஜைகளும் வழிபாடுகளும் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றன. பாசுபத அஸ்திரம்!மகாபாரதப் போரில், கௌரவர்களை அழிக்கவேண்டுமாகில், “பாசுபத அஸ்திரம் கொணர்ந்தால் மட்டுமே சாத்தியம்!” என்பதை அர்ஜுனனுக்குச் சொன்னான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. அர்ஜுனனோ, “நாமிருப்பதோ கானகத்தில், மறைந்திருப்பது, அஞ்ஞானவாசத்தில்! இங்கு பூஜை செய்ய, சிவலிங்கத்திற்கு எங்கே போவது?” என்று கவலைகொள்ள, ஸ்ரீ கிருஷ்ணனோ, தன்னையே சிவபெருமானாக நினைத்துக்கொண்டு, “பூஜை செய்” எனக்கூற, “சரி!  பூஜை செய்ய வில்வ இலைகளுக்கு எங்கு செல்வது?” என வினவ, பக்கத்தில் உடன் உதித்த வில்வ மரத்தினைக் காட்டி, “தங்க ரேகைகளுடன் கூடிய, மூன்று இதழ்களுடனும் கூடிய இவ்வகை வில்வம் மிகவும் உயர்ந்தது; இதனால் பூஜைசெய்!” எனக் கூற, அவ்வாறே அர்ஜுனனும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிற்குப் பூஜை செய்துவிட்டு, இருவரும் கைலாயம் சென்றனர்.அங்குதான், கிருஷ்ணருக்குப் பூஜைசெய்த அதே மூன்று இதழ்களுடனும், தங்க ரேகையுடன்கூடிய வில்வ இலைகள், சிவபெருமானுடைய, ஜடாமுடியில் வீற்றிருக்கக் கண்ட அர்ஜுனன் பிரமித்துப்போய் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்க்க, அதற்கு ஹரியும் – ஹரனும் ஒன்றே என்பதைப் மந்த ஹாஸப் புன்னகையாலேயே பதிலாகத் தந்து பாசுபத அஸ்திரத்தைப் பெற்றுத் தந்த நன்னாளே, வைகாசி விசாகம்! (இதை நினைவுகூரும் வகையிலேயே இன்றளவும் திருமலை திருவேங்கடத்து இன்னமுதனுக்கு வில்வத்தினால் அர்ச்சனை நடைபெறுகிறது). இந்தப் புண்ணிய தினத்தில்தான் ஸ்ரீசிவபெருமான், மழு ஆயுதத்தை ஏந்தி களிநடனம் புரிந்திட்டார்.பராசர முனிவர்!நான்கு வேதங்களையும் உபநிஷத்துகளையும், கசடறக் கற்றுத் தேர்ந்த பராசர முனிவருக்குப் புத்திரர் அறுவர். அவர்களனைவரும் புத்தி சாதுர்யத்திலும், படிப்பிலும் சமர்த்தர்கள். நீர்நிலைகளை ஒருபோதும் அசுத்தம் செய்யாதீர்!ஒருதினம் அவர்கள் அறுவரும் இன்பமாகக் குளத்தில் குளித்துக்கொண்டு, தன் சகோதரர்கள் மீது நீரை வாரி இறைத்தும், நீரை அடித்து விளையாடியும், அதிலுள்ள மீன்களை இரக்கமின்றி, கொன்று ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொண்டு விளையாடியும் மகிழ்ந்திருந்தனர். பிற ஜீவன்களை ஹிம்சை செய்யக் கூடாது; நீரானது சிவபெருமானின் அம்சம், அந்நீரை அசுத்தம் செய்யக்கூடாது என்று கரையிலிருந்த தந்தையாகிய முனிவர் பராசரர் அறிவுறுத்தியும் செவிமடுக்காத தம் புதல்வர்களின் மீது கடும் சினங்கொண்டு, மீனாகப் போகுமாறு சபித்துவிட்டார். விபரீதத்தை உணர்ந்த அச்சிறுவர்கள் தம் தந்தையிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினர். மனம் இரங்கிய அவர், மலைமகளின் அருளினால் நீங்கள் நன்னிலை பெறுவீர்கள், என்றார்! தாயின் கருணை…!மீனாக மாறிய அவர்கள் நெடுநாள் உமைய வளின் அருளுக்காக பொலிவிழந்து, காத்திருந்தனர். இவர்களுக்கு இன்னருள் புரிய நினைத்த இமையவள், தன் திருக்குமரனுக்கு தங்கப் பாலாடையில் ஞானப்பாலைக் கொடுத்துக்கொண்டு, அதிலிருந்து சில துளிகளை, பராசரரின் தவப்புதல்வர்களின் அருகில் தெளித்தாள். அப்பாலைப் பருகிய முனிவரின் புதல்வர்கள் ஐவரும் மகத்தான சக்தியுடன் கூடிய பெருமுனிகளாயினர். ஸ்ரீ முருகப் பெருமானின் தரிசனம்…!தங்களுக்கு நல்வாழ்வளித்த சிவபெருமான் திவ்ய தம்பதியினரை மனத்தினால் வணங்கி நின்றவுடன், “நீங்கள் அறுவரும் திருச்செந்தூர் சென்றால் முருகக் கடவுள் உங்களுக்கு அருள் புரியக் காத்துள்ளார்!” என வானத்திலிருந்து ஓர் அசரீரி கூற, அவர்களனைவரும் திருச்செந்தூர் சென்று கடும் தவமியற்றினர். அவர்களின் கடுந்தவத்தை மெச்சிய ஸ்ரீ முருகப் பெருமான் காட்சிகொடுத்த புண்ணிய தினம் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்துடன்கூடிய பௌர்ணமி நன்னாளில் ஸ்ரீ முருகப் பெருமானின் இன்னருள் கிட்டியது. தெய்வீகத் திருமணங்கள்…!ஜாதகத்தில் பூர்வபுண்ணியஸ்தானம் வலுவிழந்துள்ளோர்கள் அந்நன்னாளில் ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட்டால், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டாது! சிவபெருமான் பார்வதி திருமணமும், முருகப்பெருமான் தெய்வானையைத் திருமணம்புரிந்த இந்தத் தினம் புண்ணிய தினமாகவும், இந்நன்னாளில் அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்து, ஏழை எளியோர்களுக்கு நல்ல புளிக்காத தயிர் சாதம், நீர்மோர், பானகம் நிதி வசதியுடையோர், வஸ்திரம், குடை, செருப்புத் தானம் செய்வது மகத்தான புண்ணிய பலன்களைத் தரக்கூடியது. செவ்வாய் தோஷம் விலகும்; களத்திர ஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள தோஷம் அடியோடு நீங்கும். இதனால் சகல சௌபாக்கியங்களும், புத்திரபாக்கியமும் கிட்டும். எதிரிகளின் தொல்லை அடியோடு விலகும்.(வைகாசி விசாகம்: விசாக நட்சத்திரம் வைகாசி 29 (ஜுன் மாதம் 12)ந் தேதி ஞாயிற்றுக்கிழமை).

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi