கமுதி, ஜூன் 7: கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் உள்ள ஆதி விநாயகர், வழிவிடு விநாயகர், வில்லாலுடைய அய்யனார் கருமேனி அம்மன், காளியம்மன், முப்பிடாரி அம்மன், ஊர் காவலன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா கடந்த 30ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. பின்னர் 4ம் தேதி காளியம்மன் கோயில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நாளான நேற்று கிராமத்தின் வழிவிடு விநாயகர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் மேளதாளம், ஜிப்லா மேளம் மற்றும் வானவேடிக்கையுடன் 500 க்கும் மேற்பட்ட பெண்கள்,
சிறுமிகள் தலையில் பால்குடத்துடன் ஊர்வலமாக கண்மாயில் பகுதியில் உள்ள வில்லாலுடைய அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபட்டனர். கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இன்று கிராமத்தில் இருந்து முளைப்பாரியை ஊர்வலமாக கருமேனி அம்மன் கோயிலுக்கு எடுத்து சென்று பின்னர் ஆற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.