பல்லடம், மே 30: கார்த்திகை பட்டத்தில் நடவு செய்யும் தக்காளி, மாசி, பங்குனி மாதங்களில் அறுவடைக்கு வரும். தக்காளி சீசன் காலம் என்பதால் அபரிமிதமான விளைச்சல் கிடைக்கும்.இதனால் விலை சரிவது வழக்கம். ஆனால் மாசி பட்டத்தில் சாகுபடி செய்யும் தக்காளி, சித்திரை, வைகாசி மாதங்களில் அறுவடைக்கு வரும்.மாசி பட்டம் கடும் வெப்பம் நிலவும் காலம் என்பதால் பாதி விளைச்சல் கூட கிடைக்காது. அப்போது தக்காளி விலை உயர்வது வழக்கம். பல சமயங்களில் கிலோ 100 ரூபாய் வரை விலை உயரும்.தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்தாண்டு நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டது.
இந்தாண்டு அதிக வெப்பம் நிலவிய போதிலும் வெளியூர் தக்காலி வரத்து அதிகம் இருந்ததால் தக்காளி விலை உயரவில்லை. கிலோ ரூ.10 முதல் ரூ.15க்கு தக்காளி விற்பனை ஆகிறது. தக்காளி நடவு செய்த விவசாயிகள் பலர் நஷ்டத்தை சந்தித்தனர். தற்போது வைகாசி பட்டம் துவங்கி உள்ளது. இது ஆடி மாதத்தில் அறுவடைக்கு வரும். இனிமேலாவது நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைகாசி பட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.