தேன்கனிக்கோட்டை, ஆக.22: தளி வட்டாரம், மதகொண்டப்பள்ளி ஊராட்சியில், தளி வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் தலைமையில், கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி நடத்தப்பட்டது.
இதில் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் திவ்யா பங்கேற்று, வேளாண் பொறியியல் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் பற்றி தெளிவாக கூறினார். வேளாண்மை உதவி இயக்குநர் முருகன், ஒருங்கிணைந்த பண்ணையம், அசோலா பயன்கள், பஞ்சகாவ்யம் தயாரிப்பு முறைகள், மண்புழு உரத்தின் பயன்பாடுகள், மண் மாதிரி எடுக்கும் முறைகள் பற்றி விளக்கமளித்தார். வேளாண்மை அலுவலர் சுப்ரமணி, விதை நேர்த்தி செய்வதன் பயன்பாடுகள், கோடை உழவின் பயன்கள், ராகி வரிசை நடவு முறை பற்றி விளக்கினார்.
உதவி வேளாண்மை அலுவலர் விக்கிரமாதித்தன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் சொட்டு நீர் பாசனத்தின் நன்மைகள் பற்றி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் நாத், உழவன் செயலியை பயன்படுத்தும் முறைகள் மற்றும் பதிவு செய்தல் பற்றி கூறினார். அதேபோல், கெலமங்கலம் வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ், ராயகோட்டை பஞ்சாயத்து ஏழு கிராமங்களை உள்ளடக்கிய விவசாயிகளுக்கு, கிராம வேளாண் முன்னேற்ற குழு குறித்து பயிற்சி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் கலா, துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி வேளாண்மை அலுவலர் தேவராஜ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா ஆகியோர் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினர். இதில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.