உடுமலை, மே 20: கிராம தங்கல் திட்டத்தின்கீழ் குடிமங்கலம் வட்டாரத்தில் தங்கியுள்ள பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மை கல்லூரி மாணவிகள் அபர்ணா, தீபிகா, திவ்யா, ஜான்சி, கீர்த்திகா, மீனரோசினி, பவித்ரா, ரித்திகா, சூரிய பிரபா, சுவேதா ஆகியோர் களப்பணியாற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாணவிகள் தளியில் அமைந்துள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் செயல்விளக்கம் மற்றும் விதை உற்பத்தி பண்ணையை பார்வையிட்டனர்.
தமிழகத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் ஒரே மையமாக விளங்கிய இது தற்பொழுது தென்னை சிறப்பு மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு இம்மையத்தின் உதவி இயக்குநர் ரகோத்தமன் தென்னை வளர்ச்சி வாரியத்தின் பணிகளை விரிவாக எடுத்துரைத்தார்.
உயர்தர நாற்றுகள் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுடன் அறிவியல் அடிப்படையிலான மற்றும் ஒருங்கிணைந்த தென்னை சாகுபடியை விளக்குவதற்காகவே விதை உற்பத்திப் பண்ணைகள் நிறுவப்பட்டுள்ளன. அவர், தென்னையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள், பல்வேறு வகையான தென்னைகளின் சிறப்பு பண்புகள், தாவர பெருக்க முறைகள், மதிப்புக்கூட்டும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.