கந்தர்வகோட்டை, மே 28: புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் உருமாநாதர் கோயிலில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் முதல் நிலை ஊராட்சியில் உள்ள இந்துசமய அறநிலைதுறைக்கு உட்பட்ட உருமாநாதர் கோயிலில் சித்திரை மாதம் திருவிழாவும், தேரோட்டமும் சிறப்பு. இந்த விழாவில், கந்தர்வக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இங்கு வந்து வழிபட்டால் பெண்களுக்கு திருமணதடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுவதாகவும், மணம் ஆன பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்று கூறுகிறார்கள். தஞ்சை -புதுகை சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் குறுக்கு சாலையில் உள்ளது. குறுக்கு சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். இருசக்கர வாகனங்கள் டயர் பஞ்சர் ஆகும் நிலையும் வாகனம் சறுக்கிவிழும் சூழ்நிலையும் உள்ளது. எனவே, இந்த சாலையை சீர் செய்து தர வேண்டும் என இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும், பக்தர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.