ஆர்.எஸ்.மங்கலம், நவ.1: திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் அருகே வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கட்டடம் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் ரூ.1.5 கோடியில் கட்டப்பட்டு 2019ல் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டடம் கட்டி ஒரு சில ஆண்டுகளே ஆன நிலையில், கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து கானப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு தேவையான விவசாய இடுப்பொருட்களை வைத்து பாதுகாக்கும் அறை, படிக்கட்டு பகுதி, மற்றும் கழிவறை என கட்டடத்தின் பல பகுதிகளும் சேதமடைந்து காணப்படுகிறது.
அதே போல் அலு வலகத்தின் தரைத்தளத்தில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்கள் அலுவலகத்தின் முகப்பு உள்ளிட்ட மற்றும் பல பகுதிகளிலும் சேதமடைந்து உள்ளதால், அலுவலகத்திற்கு செல்லும் விவசாயிகளும், ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே விவசாயிகள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கட்டடத்தின் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.