ஆண்டிபட்டி, செப்.5: தேனியில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்துடன் 10 பவர் டில்லர்களும், 23 பவர் வீடர்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வேளாண் தொழிலில் தற்போது நிலவி வரும் விவசாய பணியாளர்களின் பற்றாக்குறையை போக்கி வேளாண் பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்கு ஏதுவாக \”பண்ணை இயந்திரமயமாக்குதல் திட்டம்\” தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நேற்று காணொளி காட்சி வாயிலாக குறு, சிறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திர கருவிகளை வழங்கி துவங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்துடன் கூடிய 10 பவர் டில்லர்களும், 23 பவர் வீடர்களையும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகளுக்கு வழங்கினார். இதில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்குதல் 2023-24ம் ஆண்டு திட்டத்தில் அரசு தமிழகம் முழுவதும் 5000 பவர் டில்லர், பவர் வீடர்களை தனிநபர்கள் பயன் பெறும் வகையில் உழவர்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் உழவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு அரசு மானியம் பெறுவதற்கு முழு தொகையை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு அரசு மானியத் தொகை போக மீதம் உள்ள விவசாயிகளின் பங்களிப்பு தொகையை மட்டும் செலுத்தி வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகளை பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை வழங்கியுள்ளார். விசை உழுவை இயந்திரம் (பவர் டில்லர்) மற்றும் களை எடுக்கும் கருவியை (பவர் வீடர்) தனி நபர்கள் பயன்பெறும் வகையில் பெண்கள், சிறு /குறு விவசாயிகள் மற்றும் இந்து ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ.85 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு ரூ.70 ஆயிரம் அரசு மானியம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்படுகிறது. இதில் சிறு/குறு விவசாயி சான்று பெற்றுள்ள இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் (ரூ.34 ஆயிரம்) வழங்கப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் தேனி, அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி, பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர்ராஜ், உதவி செயற்பொறியாளர் ராஜா, விஜயன், உதவி பொறியாளர் ராமகிருஷ்ணன், வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.