நாகர்கோவில், ஆக. 17: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம், (MANAGE) ஹைதராபாத் மூலமாக PGDAEM – டிப்ளமோ படிப்பு பயில விருப்பமுள்ளவர்கள் http://WWW.manage.gov.in/moocs/pgdaem-moocs.asp என்ற வலைதளத்தில் பதிவு செய்து விண்ணப்பித்திடலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2024.விண்ணப்பதார்கள் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயது நிர்ணயம் செய்யப்பட வில்லை. மொழி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி. விண்ணப்ப கட்டணம் ரூ.8 ஆயிரம் மட்டும். (விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன் செலுத்தப்பட வேண்டும்) படிப்பு காலம் ஒரு வருடம்.
இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும். வேளாண்மைத்துறை மற்றும் சகோதரத்துறை அலுவலர்கள், வேளாண் வணிக நிறுவன ஊழியர்கள், வேளாண் கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் கற்றல் அடைவுகள் மூலம் தங்கள் பணிசிறப்பு நிலை அடைந்திடவும் ஏதுவாக அமையும். இளங்கலை (வேளாண்மை) பட்டப்படிப்புடன் கூடுதலாக இந்த ஓராண்டு (PGDAEM) படிப்பினை முடித்து சான்றிதழ் பெற்ற பின்னர் சுயமாக பொருளீட்டும் வகையில் தனியார் மற்றும் அரசு பண்ணைகளில் பணிவாய்ப்புகள் பெற வழிவகுக்கும். மேலும் தனியார் பண்ணை மேற்பார்வையாளராகவும், விவசாயம் சார்ந்த தனியார் நிறுவனங்களில் ஏரியா மேனஜர்உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்து பயனடைந்திடலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.