நாகப்பட்டினம்,நவ.15: வேளாங்கண்ணி பேரூராட்சியை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என சட்டபேரவை மதிப்பீட்டு குழுவிடம் வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
வேளாங்கண்ணி பேரூராட்சி வங்க கடற்கரையோரம் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலமாகும். இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றலா பயணிகள் வந்து செல்கின்றனர். விழா காலங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகளும், சுற்றுலாப்பயணிகளும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து செல்கின்றனர். நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கிழக்கு பகுதியில் வங்க கடலோரம் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.
வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிக்கு வருகை தரும் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் நகரின் மையப்பகுதியான பேருந்து நிலையம் மற்றும் வாகன நிறுத்து தளங்களுக்கு பிரதான சாலை வழியாக வருகைப்புரியும் வாகனங்ளை மாற்று வழியான கிழக்கு கடற்கரை சாலையினை சென்றடையும் வகையில் புதிதாக ஒரு மாற்று வழிசாலையினை தேர்வு செய்து உருவாக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல்களை முற்றிலும் தவிர்க்க முடியும். அதே போல் எந்த ஒரு பொழுது போக்கு அம்சங்களும் இல்லாத நிலையில் உள்ளது. இதனால் பேராலயத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பிவிடுகின்றனர்.
சுற்றுலா பயணிகளை நம்பியே வாழ்ந்து வரும் இப்பபேரூராட்சி பகுதி வாழ் பொது மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றது.எனவே வேளாங்கண்ணி பேரூராட்சியின் சுற்றுலா வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் வெள்ளையாற்றின் கரையோரம் படகுதுறை அமைத்து வெள்ளையாற்றின் மேற்கு பகுதியில் உள்ள அரசு நிலத்தில் சுற்றலா பயணிகள் பொழுது போக்கிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறை மூலம் தீம் பார்க் அமைக்க வேண்டும். வருகைப்புரியும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பொழுது போக்கும் அம்சங்கள் இருந்தால் நீண்ட நாட்கள் வேளாங்கண்ணியில் தங்கி செயல்வார்கள். இதனால் இப்பகுதி வாழ் பொது மக்களின் வாழ்வாதாரங்கள் உயர்வதுடன், உள்ளூர் உற்பத்திகளும் பெருகும். எனவே வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியின் தென் பகுதியில் அமைந்துள்ள வெள்ளையாற்றின் கரையில் படகுத்துறை ஒன்றை உருவாக்கி, மேற்கு பகுதியில் அலையாத்தி காடுகளை சுற்றுலா பயணிகளின் கண்டு ரசிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி துறை மூலம் தீம் பார்க் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.