நாகப்பட்டினம்,ஆக.19: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருவிழாவை முன்னிட்டு சாலைகளில் கால்நடைகளை சுற்றிதிரிய விடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெழவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. விழா காலங்களில் ஏராளமான பயணிகள் நடைபயணமாகவும், வாகனங்களிலும் வந்து வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்வார்கள். எனவே சாலைகளிலும், வேளாங்கண்ணி பேராலய வளாகத்திலும் கவனிப்பார் இன்றி கால்நடைகளை திரியவிடக்கூடாது.
இவ்வாறு கால்நடைகள் சுற்றிதிரிவதால் வேளாங்கண்ணி பேராலய ஆலயத்திற்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் ஆகியோருக்கு இடையூறு ஏற்படும். எனவே சுற்றித்திரியும் நாய், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை உரிமையாளர்கள் சாலைகளில் சுற்றிதிரியாமல் பார்த்து கொள்ள வேண்டும். உரிமை கோராத கால்நடைகளை நகராட்சி, பேரூராட்சி சார்பில் பிடிக்கப்பட்டு கோசாலையில் கொண்டு விடப்படும். கால்நடை உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முத்திரை வைக்காத இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது இந்திய அரசு பிசிஏ சட்டம் 59 (60)ன் படி மிருக வதைத்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பரிசோதனை செய்து முத்திரையிடப்பட்ட இறைச்சியை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.