சென்னை, நவ.2: சென்னை கடற்கரை -வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் வேளச்சேரி – பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைப்பதற்கான இரும்புத் தூண்களை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் உயர்மட்ட மேம்பாலத்தில் ரயில் பாதைகள் அமைக்க 6 இரும்புத் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 10.20, 11.05, 11.30, 11.59 மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 10.40, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.40, 11.20, 11.40 செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் 3ம் தேதி (நாளை) வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் சென்னை எழும்பூர்- மன்னார்குடி விரைவு ரயில் (வண்டி எண்.16179), சென்னை எழும்பூர் – மங்களூரு விரைவு ரயில் (16159), சென்னை எழும்பூர்- திருச்சி விரைவு ரயில் 12653) ஆகிய ரயில்கள் இன்று (1ம் தேதி) முதல் 3ம் தேதி வரை 3 நாட்களுக்கு எழும்பூர்-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு. அதேபோல் சென்னை எழும்பூர்- சேலம் அதிவிரைவு ரயில் (22153) இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை கடற்கரை, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, அரக்கோணம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். பகல் நேரத்தில் பணிகள் மேற்கொள்ளுவதால் ரயில்கள் ரத்து செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொது மக்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பாதிக்கப்படுவதால் வரும் 3ம் தேதி வரை பராமரிப்பு பணிகளை இரவு மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.