சென்னை, ஆக.31: ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை முன்னிட்டு வேளச்சேரி உள்வட்ட சாலையில் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளச்சேரி உள்வட்ட சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 9 மணி வரை ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் மேற்படி நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன் விவரம் வருமாறு: ஆலந்தூர் மற்றும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து வேளச்சேரி உள்வட்ட சாலை வழியாக விஜயநகர் மற்றும் தரமணி நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் சன் ஷைன் பள்ளி அருகே வலதுபுறமாக திரும்பி, எதிர்புறமுள்ள உள்வட்ட சாலை வழியாக சென்று, கைவேலி சந்திப்பில் ‘யு’ டர்ன் செய்து ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். விஜயநகர் மற்றும் தரமணியிலிருந்து வேளச்சேரி உள்வட்ட சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் வழியாக கைவேலி சந்திப்பில் ‘யு’ டர்ன் சென்று வேளச்சேரி உள்வட்ட சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.