மதுரை, நவ. 20: பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள ஆசிரியர் பயிற்றுநர் பதவிகளுக்கான போட்டித்தேர்வில் பங்கேற்போருக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக 2023ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள ஆசிரியர் பயிற்றுநர் பதவிகள் உள்ளடக்கிய 2,582 காலிப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இத்தேர்வு 2024ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி நடக்கிறது. இத்தேர்விற்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2ல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் https://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவ.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த போட்டித் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் நவ.21 முதல் தொடங்க உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் மதியம் 2.30 முதல் 5.30 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்க விரும்பும் பயிற்றுநர்கள் தங்களது சுயவிபரம் அடங்கிய மனுவுடன் நேரில் வரலாம். மேற்கண்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் விதமாக நூலகம், மாணவர் அமர்ந்து படிக்க ஏதுவாக வகுப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.