விழுப்புரம், ஜூன் 5: சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி விழுப்புரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட முதியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணி(63), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு தனலட்சுமி கார்டனைச் சேர்ந்த வைத்தியநாதன்(65) என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அப்போது மணியின் மகன் ராமேஸ்வரன் பிஇ பட்டம் முடித்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி வைத்தியநாதன் மணியிடம் ரூ.3 லட்சம் பணம் வாங்கி உள்ளார்.
ஆனால் அவர் கூறியவாறு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இந்நிலையில் பணத்தை திரும்ப கேட்டபோது ரூ.2 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.1 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று கேட்டபோது அவரை திட்டி பணத்தை தர முடியாது என்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து மணி நேற்று அளித்த புகாரின்பேரில் வைத்தியநாதன் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.