பாவூர்சத்திரம், ஆக.24: பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் – கிளாஸ் அகாடமி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாட்டில் கண்ணாடி உற்பத்தித் தொழில் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த துறையில் சிவில், மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பட்டய பொறியாளர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளன. இதையடுத்து கிளாஸ் பற்றிய தொழில் நுட்பத்தை எம்.எஸ்.பி.வி.எல் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கவும், வேலை வாய்ப்புகள் வழங்கவும் கல்லூரியின் முதல்வர் ரமேஷ், கிளாஸ் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி மணி ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சிக்கு பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் லட்சுமி ஆனந்த் தலைமை வகித்தார். முதல்வர் ரமேஷ் வரவேற்றார். ரூபின் கிளாஸ் பிரைவேட் லிமிடெட், திருச்சியின் தலைமை நிர்வாக இயக்குனர் தாரிக் அலி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்ணாடி தொழில்துறையில் மாணவர்களின் சிறப்பான எதிர்கால வாய்ப்பு மற்றும் மேம்பாடு குறித்து சிறப்புரையாற்றினார். வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.