ஓசூர்: ஓசூரில் உள்ள தனியார் கம்பெனி நிர்வாகத்தின் சட்ட மீறல்களை தமிழக அரசு தலையிட்டு, தொழிலாளர்களின் வேலையை பாதுகாக்க கோரி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மற்றும் எப்ஐடியூ தொழிற்சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யுனைடெட் எம்ப்ளாயீஸ் யூனியன் சங்க துணைத்தலைவர் மாதையன் தலைமை வகித்தார். யூசிபிஐ ஓசூர் மாநகர செயலாளர் வேலுசாமி, சங்க செயலாளர் ஜெய்குமார் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து எப்ஐடியூ தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், யூசிபிஐ திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் சங்கர், ஓசூர் மாநகர துணை செயலாளர் பழனி, புதிய ஜனநாயக தொழிலாளர் கட்டிட சங்க மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
வேலைக்கு செல்லும் நிரந்தர தொழிலாளிகள், தொழிற்சாலை வாயிலில் நிர்வாகம் சட்ட விரோதமாக தடுத்து நிறுத்தி, ஒப்பந்த தொழிலாளிகளை பணியிடத்தில் வேலைசெய்ய அனுமதிப்பதால், இணை இயக்குனர் தொழிலாளர் பாதுகாப்பு துறை தலையிட்டு, ஒப்பந்த உரிமங்களை ரத்துசெய்ய உத்தரவிட கோரியும், தமிழக அரசு நிரந்தர வேலை நீக்க தடைசட்டம் கொண்டுவந்து தொழிலாளர்களின் வேலையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.