குடியாத்தம், ஏப்.11: குடியாத்தம் கெங்கை அம்மன் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் அருகில் புகழ்பெற்ற கெங்கை அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் சிரசு திருவிழா நடைபெறும். இதனைக் காண தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். மேலும், அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கொடிமரம் அமைக்கப்பட்டு நேற்று கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 36 அடி பிரமாண்ட கொடி மரம், கிரேன் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் கொடிமரம் பிரதிஷ்டை முன்னிட்டு சிறப்பு யாகங்களும் மேற்கொள்ளப்பட்டது.