வேலூர், ஆக.14: செய்யாற்றில் சிறுமி பலி எதிரொலியால், வேலூர் மாவட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர். இதில் 2 ஜூஸ் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் ₹10க்கு விற்கப்படும் ஜூஸ் குடித்ததில் சிறுமி இறந்தார். இதைத்தொடர்ந்து ஜூஸ் கடைகளில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று காட்பாடி, சத்துவாச்சாரி, பூட்டுத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புக்குழு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ராஜேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பெட்டிக்கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள் மற்றும் ஜூஸ் கடைகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு நடத்தினர். அப்போது, கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பாக்கெட் மற்றும் பாட்டில் ஜூசின் தரம், காலாவதி தேதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று 14 கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் 2 ஜூஸ் மாதிரிகள் ஆய்வுக்காக சென்னையில் உள்ள உணவு பரிசோதனை ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.