வேலூர், மே 28: வேலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட 376 பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. தொடர்ந்து அடுத்த மாதம் வரையில் வட்டாரம் வாரியாக நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் செயல்பட்டுவரும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளர்கள், 6 குறுஅங்கன்வாடிபணியாளர்கள் மற்றும் 163 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் சாந்த பிரியதர்ஷினி தலைமையில் முதல்கட்டமாக அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு வேலூர் பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று நேர்முகத்தேர்வு மேற்கொண்டனர்.
இதில் 363 அங்கன்வாடி பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 308 பேர் பங்கேற்றனர். 55 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதேபோல் உதவியாளர் தேர்விற்கு 128 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 104 பேர் பங்கேற்றனர். 24 பேர் தேர்வுக்கு வரவில்லை. தொடர்ந்து கணியம்பாடி வட்டாரத்தில் நேர்முகத்தேர்வு நடக்க உள்ளது. இதையடுத்து வட்டாரம் வாரியாக அடுத்த மாதம் வரையில் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.