வேலூர், நவ.19: வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கிய சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.5.88 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த 12ம் தேதி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பணி மற்றும் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை உள்பட வெளியூர்களில் தங்கியிருந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த 10ம் தேதி முதல் திரும்பினர். இதற்காக பெரும்பாலான மக்கள் பஸ்கள், ரயில்களை பயன்படுத்தினர்.
அரசு சார்பில் அதிகளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதன்படி, வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 135 சிறப்பு பஸ்கள் கடந்த 9ம் தேதி 15ம் தேதி வரை இயக்கப்பட்டது. வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் சிறப்பு பஸ்கள் மூலம் 7 நாட்களில் 60 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு ரூ.5.88 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சிறப்பு பஸ்கள் மூலம் வழக்கமான வருவாயை விட கூடுதல் ரூ.20 லட்சம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.