வேலூர், நவ.11: வேலூர்-காட்பாடி சாலையில் மின்கம்பங்கள் அமைப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வேலூர் சிஎம்சி வழியாக காட்பாடிக்கு செல்லும் சாலையில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக சாலையில் ஒருபுறம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மின்கம்பங்கள் சேதமாகியுள்ளது. சேதமான மின்கம்பங்களால் விபத்து ஏற்படும் எனக்கருதி அதனை மாற்ற மின்வாரியத்துறை முடிவு செய்தது.
அதன்படி வேலூர் மக்கான் சந்திப்பு முதல் நேஷனல் சந்திப்பு வரை காட்பாடி சாலையில் உள்ள சேதமான 3 மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதற்காக அவ்வழியாக திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் பழைய பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.