வேலூர், ஆக.4: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க தாலுகா வாரியாக மனுக்களை பெற்றுக் கொள்ள தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது மனுக்களை அதற்கான கவுன்டரில் அளித்து பதிவு செய்து முத்திரை பதித்த பின்னரே கலெக்டர் மற்றும் உரிய அலுவலர்களிடம் வழங்க முடியும். இதனால் ஒரே கவுன்டரில் மக்கள் கூட்டம் குவிந்து நெரிசல் மற்றும் குளறுபடி ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி என 5 தாலுகாக்களுக்கும் தனித்தனியாக மனுக்களை பெற்று பதிவு செய்வதற்கு கவுன்டர்களை அமைக்க கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, நேற்று ஒவ்வொரு தாலுகா பெயர்கள் தாங்கிய தனித்தனி கவுன்டர்களை அமைக்கும் பணியில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டனர்.