வேலூர், ஜூன் 24: வேலூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமிக்கு வேலூர் மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்(47). இவர் அணைக்கட்டு அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கடந்த 2019ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரித்தார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்தவடைந்த நிலையில் நேற்று மாலை தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி மணிவண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்ததுடன், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.