வேலூர், மே 31: வேலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தையின் கட்டை விரலை கவனக்குறைவால் செவிலியர்கள் துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் முள்ளிபாளையம் மாங்காய் மண்டி பகுதியை சேர்ந்தவர்கள் விமல்ராஜ்(30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நிவேதா(24). இவருக்கு கடந்த 24ம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சீமான்ஸ் பிரிவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை குழந்தையின் கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக ஏற்கனவே இருந்த ஊசியை செவிலியர்கள் மாற்றுவதற்காக குழந்தையின் வலது கை மணிக்கட்டில் ஊசியுடன் டியூப்பை ஒட்டியிருந்த டேப்பை கத்திரியால் வெட்டினர். அப்போது, எதிர்பாராதவிதமாக குழந்தையின் கட்டை விரலையும் சேர்த்து செவிலியர்கள் துண்டாக்கி விட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பெற்றோருடன் தகவல் அறிந்து வந்த உறவினர்களும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக துண்டான விரலுடன், குழந்தையை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.