வேலூர், ஜூலை 16: வேலூர் அடுத்த அரியூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய ஓசூரை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணை விபச்சார வழக்கில், வேலூர் மாவட்டம் லத்தேரி போலீசார் கடந்த மாதம் மீட்டனர். தொடர்ந்து கோர்ட் உத்தரவின்பேரில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அவ்வப்போது, பரிசோதனைக்காக அழைத்துச்செல்ல ஏதுவாக, வேலூர் அடுத்த அரியூரில் உள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 11ம் தேதி அங்குள்ள கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு நீண்டநேரமாகியும் இளம்பெண் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த இல்லத்தில் இருந்தவர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தபோது, இளம்பெண் தப்பியோடியது தெரியவந்தது. இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.