வேலூர், ஜூலை 7: வேலூரில் வாகன சோதனை, கடைகளில் பறிமுதல் செய்தது உட்பட 1,350 கிலோ குட்காவை, உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் எரித்து, மண்ணில் புதைத்து அழித்தனர். வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன சோதனை மற்றும் கடைகளில் பதுக்கி விற்ற குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல ஆண்டுகளாக குட்கா பொருட்கள் காவல் நிலையத்தில் இருப்பதால் இடமில்லாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த குட்கா பொருட்களை அழிப்பதற்கு காவல் துறை தரப்பில் கோர்ட்டில் அனுமதி கோரப்பட்டது. கோர்ட் அனுமதி அளித்தவுடன் போலீசார் மற்றும் வேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் முன்னிலையில் நேற்றுமுன்தினம் குட்கா பொருட்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 1,350 கிலோ குட்கா பொருட்களை, விரிஞ்சிபுரம் பாலாற்றங்கரை ஓரத்தில் ஜேசிபி மூலம் 8 அடி ஆழம் பள்ளம் தோண்டி, அதில் குட்காவை போட்டு எரித்து அழித்தனர். பின்னர் மண் போட்டு மூடினர்.