வேலாயுதம்பாளையம், ஜூன் 27: வேலாயுதம்பாளையம் அருகே வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்த 20 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஹான்ஸ் ,பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சம்மந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டுக்குள் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்களை சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது . அதன் அடிப்படையில் சுமார் 20 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த தளவாபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி (50) என்பவரை கைது செய்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.