வேலாயுதம்பாளையம், ஜூன் 2: வேலாயுதம்பாளையம் அருகே நேற்று அதிகாலை சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாலை தடுப்பில் மோதிய விபத்தில் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கி சேதமடைந்தது. அந்த காரில் 302 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை போலீசார் கைப்பற்றி காரில் வந்த 3 பேரை தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது புகளூர் நானப்பரப்பு பிரிவு அருகே கார் வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதியதில் காரின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் காரில் வந்த டிரைவர் உள்பட 3பேர் சுதாரித்துக்கொண்டதால் தப்பினர். மேலும் காரில் மூட்டை மூட்டையாக இருந்த ஹான்ஸ் , பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை எடுத்துச் செல்ல முடியாததால் காரிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நானப்பரப்பு பிரிவு அருகே கார் ஒன்று விபத்தில் சிக்கி காரின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்த நிலையில் கார் நிற்பதாக அந்த வழியாக வந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று காரை திறந்து பார்த்தபோது காருக்குள் மூட்டை மூட்டையாக ஹான்ஸ், பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வாகனம் ஒன்றை வரவழைத்து காரில் இருந்த மூட்டைகளை வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் . இவற்றில் சேதமடைந்த காரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கு மூட்டைகளில் இருந்த புகையிலைப் பொருட்களை எடை போட்டு பார்த்த போது அதில் 302 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் புகையிலைப் பொருட்களை அதிகாலையில் கடத்திச் சென்ற நபர்கள் யார் என்பது குறித்து காரின் வாகன பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.