வேலாயுதம் பாளையம், செப். 1: கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி 18 -வது வார்டு ஓனவாக்கல்மேடு பகுதியில் வசிப்பவர் வளர்மதி, நகராட்சி தூய்மை பணியாளர். இவரது வீட்டில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டுக்குள் இருந்த உணவுப் பொருட்கள், துணிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்த புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நேரில் சென்று பாதிப்பு குறித்து கேட்டறிந்து நிவாரண உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார். அதேபோல், நகர்மன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் ஒரு சிப்பம் அரிசி மூட்டை மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். அப்போது, தொழிற்சங்க தலைவர் அண்ணா வேலு மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.