வேப்பூர், ஏப். 26: கார் மீது மற்றொரு கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொய்யாதநல்லூரை சேர்ந்தவர் கமாலுதீன்(72). இவர் நேற்று முன்தினம் இரவு தனது பேரன் முகமது இஷ்ரத் (15), இவரது உறவினரான சதாம் உசேன்(33), சதாம் உசேன் மகள் பிஸ்மி பிகரா(15), சதாம் உசேன் மனைவி ஷர்மிளா பானு(28), மீமிசலை சேர்ந்த ஹனிபா மகன் புகாரி (25) ஆகியோருடன் காரில் புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். காரை சதாம் உசேன் ஓட்டி வந்தார்.நேற்று காலை 8 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ஏ.கொளப்பாக்கம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது வலதுபுறம் வந்த மற்றொரு கார் மோதியதில், இவர்களது கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கமாலுதீன், அவரது பேரன் முகமது இஷ்ரத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சதாம் உசேன், பிஸ்மி பிகரா, ஷர்மிளாபானு, புகாரி ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாத்தா, பேரன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.