பெரம்பலூர், ஆக.25: பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று வேப்பந்தட்டை வட்டார பள்ளிகளுக்கு இடையே யான குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் துவங்கி வைத்தார். இதில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர்.
இப்போட்டிகளில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவில், 3000 மீ.ஓட்டத்தில் அரும்பாவூர் அரசு பள்ளி மாணவி அர்ச்சனா முதலிடமும், அதேப்பள்ளி மாணவி பாரதி 2ம் இடமும் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவர்கள் பிரிவில் உடும்பியம் ஈடன் கார்டன் பள்ளி மாணவர் எஸ்வந்த் முதலிடம் பெற்றார். பசும்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் கஜேந்திரன் 2ம் இடம் பெற்றார். அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சுகவனேஷ் மூன்றாம் இடம் பெற்றார்.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவ, மாணவிகளுக்கு 3000 மீட்டர் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு தடை தாண்டும் ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதல் மற்றும் 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவர்களுக்கு இடையேயான கோலுன்றி தாண்டுதல் போட்டிகள் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் அவர்கள் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார். போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, சுதாகர், ராஜாராம், சத்திய சீலன், இளங்கோவன், பழனிவேல் போட்டிகளுக்கு நடுவர்களாகப் பணியாற்றினர். வேப்பந்தட்டை வட்டார குறுவட்ட இணை செயலர் நடராஜ் மற்றும் காளிதாஸ் நன்றி தெரிவித்தனர்.