உடன்குடி, செப். 5: வேப்பங்காட்டில் மின் வயர்கள் உராய்வினால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தென்னை, பனை மரங்கள் எரிந்து நாசமானது. உடன்குடி அருகே லெட்சுமிபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட வேப்பங்காட்டில் ஏராளமானோர் விவசாயம், விவசாயம் சார்ந்த மற்றும் கால்நடைகளை வளர்த்து தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் மின்வயர்களில் உராய்வு ஏற்பட்டது. இதனால் தீப்பொறி விழுந்து தீப்பற்றியது. இதில் வேப்பங்காட்டைச் சார்ந்த ரோஸ்லின் அன்னதாய், ஜோசப் தர்மராஜ் ஆகியோருக்குச் சொந்தமான தோட்டங்களில் தீப்பற்றி வேகமாக பரவியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றியது.
இதுகுறித்து லெட்சுமிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஆதிலிங்கம், சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் 200க்கும் மேற்பட்ட தென்னை, பனை உள்ளிட்ட பயிர்கள் எரிந்து தீயில் கருகி நாசமானது. லெட்சுமிபுரம் விஏஓ அமுதா, உடன்குடி உதவி வேளாண்மை அலுவலர் அஜித்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் நாராயணன், லெட்சுமிபுரம் பஞ். தலைவர் ஆதிலிங்கம் ஆகியோர் தீப்பற்றி எரிந்து தோட்டங்களை பார்வையிட்டு ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தென்னை, பனை ஆகியவை தீக்கிரையாயின. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமன கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.