குடியாத்தம், பிப். 25 : குடிபோதையில் வேன் டிரைவர், டாக்டரிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி தனியார் ஷூ கம்பெனி வேன் நேற்றுமுன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. நீலகண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். அப்போது குடியாத்தம் அடுத்த பி.கே.புரம் அருகே வேன் சென்ற போது, அந்த வழியாக குடிபோதையில் பைக் ஓட்டி வந்த ஒருவர், வேனை மடக்கி நடுரோட்டில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து, வேன் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் தகாத வார்த்தையில் பேசி உள்ளார்.
பின்னர், டிரைவரை கே.வி. குப்பம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்த போலீசாரிடம் வேனை வேகமாக ஓட்டி வந்ததாக கூறி ரகளை செய்துள்ளார். அப்போது, அங்கிருந்த போலீசார் விசாரணை செய்ததில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவர் விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த அருண்கண்மணி(37) என தெரிய வந்தது. பின்னர் மது போதையில் இருந்த அருண்கண்மணியை பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அங்கு பணியில் இருந்த டாக்டரிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ் அருண்கண்மணி, கண்ணாடி கதவை உடைத்துள்ளார். இதனால், அங்கிருந்த நோயாளிகள் பதறியடித்து ஓடினர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி போலீஸ் அருண் கண்மணி மீது வழக்கு பதிந்து நேற்று இரவு கைது செய்தனர். மேலும் போலீஸ் அருண் கண்மணி என்பவர், குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றியபோது பானிபூரி கடை உரிமையாளரை தாக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மீண்டும் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.