ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, பெயர்சூட்டு விழாவிற்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்கோட்டை அருகே, கூனிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் அஸ்வினியை பிளேஸ்பாளையத்தைச் சேர்ந்த லாசர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இக்குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா கூனிபாளையத்தில் உள்ள ரவியின் வீட்டில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, லாசர் பிளேஸ்பாளையத்தைச் சேர்ந்த தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ந்து, பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிளேஸ்பாளையத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் (45), ஜெயக்கொடி (40), பவானி (30), மனோ (50), டில்லிகாந்தா (70), நாகம்மாள் (64), குஜாலா (60), ஜோதி (60), ரமணி (48) மற்றும் தனபால் (48) ஆகியோர் சுற்றுலா வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.
இந்த வேனை பிளேஸ்பாளையத்தை சேர்ந்த டில்லி (30) என்பவர் ஓட்டிச்சென்றார். பிளேஸ்பாளையத்தில் இருந்து புறப்பட்ட வேன் கொல்லபாளையம் பகுதியில் கொண்டைஊசி வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில், 10 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த பென்னாலூர்பேட்டை எஸ்.ஐ. வேலு மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் டிரைவர் டில்லி காயமின்றி தப்பி ஓடி விட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.