நாகப்பட்டினம்,செப்.13: வேதாரண்யம் அருகே மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மகாராஜபுரம், துளசியாபுரம் ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மகாராஜபுரம் மேல்பாதி சாலைக்கடையில் டாஸ்மாக்கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு வரும் மதுபிரியர்களால் அவ்வழியே பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வரும் நபர்களால் அடிதடி மற்றும் மோதல்கள் ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.