வேதாரண்யம், ஆக.1: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட முயன்ற தென்னடார் கிராம மக்கள் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேதாரண்யம் தாலுகா தென்னடார் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்குவதில் கடந்த 8 மாதங்களாக தட்டுப்பாடு நிலவுகிறது. மாற்று குடிநீர் இல்லாத இந்த ஊராட்சியில் போதிய குடிநீர் வழங்காத குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தகட்டூர் கடைவீதியில் காலி குடங்களுடன் திரண்ட கிராமத்தினர் மறியல் செய்ய முயன்றனர்.
இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, கூட்டுக் குடிநீர் திட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன், காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள், திமுக ஒன்றிய செயலாளர் உதயம், முருகையன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் முறையாக குடிநீர் வழங்காமல் தவறான தகவல்களை கொடுக்கும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும்,ஒரு வார காலத்துக்குள் நிரந்தர தீர்வு காணவும், அதுவரை டேங்கர் லாரிகள் மூலம் சீரான குடிநீர் வழங்கவும் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, சமூக ஆர்வலர் குழந்தைவேலு தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர்கள் தேவி செந்தில், மணிமேகலை பாண்டியன், முன்னாள் ஊராட்சித் தலைவர் அன்புவேலன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி அம்பிகாபதி, விவசாய சங்க நிர்வாகிகள் கோவிந்தராசு, வேங்கடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.